×

பத்திரிகையாளர்களுக்கு நிதி உதவி உண்டு; வீட்டுமனை வழங்கும் திட்டம் இல்லை: ஒன்றிய அரசு பதில்

டெல்லி: பத்திரிகையாளர்களுக்கு நிதி உதவி உண்டு; வீட்டுமனை வழங்கும் திட்டம் இல்லை என கனிமொழி என்.வி.என். சோமு கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. நோய் மற்றும் விபத்து காரணமாக உயர்சிகிச்சை தேவைப்படும் அல்லது உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறதா? அங்கீகார அட்டை இல்லாத பத்திரிகையாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுமா? அவர்களுக்கு சலுகை விலையில் வீடோ வீட்டுமனையோ வழங்கும் திட்டமிருக்கிறதா? என்று மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி., கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய செய்தி ஒலிபரப்பு, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த பதில்: பெரும் நோய்களால் அவதிப்படும் பத்திரிகையாளர்களுக்கு உயர் சிகிச்சைக்காகவும், விபத்தால் உயிரிழப்புக்கோ, நிரந்தர முடக்கத்திற்கோ ஆளாகும் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஒரு முறை நிவாரணமாகவும் நிதிஉதவி பத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.  மத்திய மாநில அரசுகள் மூலம் அங்கீகார அட்டை பெற்ற பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி, அந்த அட்டை இல்லாத பத்திரிகையாளர்களுக்கும் இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.

பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனையோ, சலுகை விலையிலான வீடுகளோ அளிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. பத்திரிகையாளர்களுக்கு பென்ஷன் வழங்கும் விஷயம் என்பது அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் நடைமுறைகளுக்கு உட்பட்டது. இதில் அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இவ்வாறு அனுராக் தாக்கூர் பதிலளித்தார்.

The post பத்திரிகையாளர்களுக்கு நிதி உதவி உண்டு; வீட்டுமனை வழங்கும் திட்டம் இல்லை: ஒன்றிய அரசு பதில் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Delhi ,CV ,N.N. Union ,Somu ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...